இந்தியாவில் லட்சக்கணக்கானோர் கருவிழிப் பாதிப்பால் ஒரு கண் அல்லது இரு கண்களிலும் பார்வைக் குறைபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் நிலையில், அதற்குத் தேவையான கருவிழிகள் போதுமான அளவில் கிடைப்பதில்லை.
இதற்கு பொதுமக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டும் என சங்கரா கண் மருத்துவமனையின் கருவிழிப் பிரிவுத் தலைவர் மற்றும் ஆலோசகர் டாக்டர் ரெட்டி, கார்னியா துறை ஆலோசகர் டாக்டர் பிரபு விஜயராகவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கண்ணின் முன்பகுதியில் அமைந்துள்ள கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவக்கூடிய பகுதியான கருவிழி, கண்ணிற்குள் ஒளிக்கதிர்கள் நுழைந்து சரியாகக் குவிய உதவுகிறது.இந்தியாவில் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்புக்கான முக்கியக் காரணங்களில் கருவிழிப் பார்வையிழப்பு 2வது இடத்தில் உள்ளது.
உலகளவில் 5.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இரு கண்களிலும் கருவிழி தொடர்பான பிரச்சினைகளால் பார்வையிழந்துள்ளதாகவும், 20 மில்லியனுக்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு கண்ணிலாவது பார்வையிழப்பு அல்லது பார்வைக் குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 1.2 முதல் 1.3 மில்லியன் மக்கள் இரு கண்களிலும், சுமார் 10 முதல் 11 மில்லியன் மக்கள் ஒரு கண்ணிலும் கருவிழிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே புதிய கருவிழிப் பார்வையிழப்பு நோயாளிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
பிறந்த குழந்தை முதல் 49 வயதுக்குட்பட்டவர்களிடையே ஏற்படும் பார்வையிழப்பில் 40% கருவிழிப் பிரச்சினைகளால் ஏற்படுகிறது; ஆனால் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கருவிழி பாதிப்பு 18% ஆக மட்டுமே உள்ளது.
கருவிழிப் பார்வையிழப்பு காரணங்கள்
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் அல்லது புரோட்டோசோவா போன்ற தொற்றுகளால் ஏற்படும் கெராடிடிஸ் கருவிழியில் நிரந்தர வடுக்களை ஏற்படுத்தி பார்வையைப் பாதிக்கலாம். காண்டாக்ட் லென்ஸ்களை முறையாகப் பராமரிக்காமல் பயன்படுத்துதல், கண்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஸ்டீராய்டு கண் சொட்டுகளைப் பயன்படுத்துதல் போன்றவை ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.
விவசாயப் பணிகள், சாலை விபத்துகள், ரசாயனப் பொருட்கள், சூடான திரவங்கள், பட்டாசுகள் மற்றும் கூர்மையான பொருட்களால் ஏற்படும் கண் காயங்களும் கருவிழியில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பல கிராமப்புறங்களில், கருவிழிப் பார்வையிழப்பிற்கு முக்கியக் காரணியாகக் காயங்களே விளங்குகின்றன.
மேலும், கெரடோகோனஸ், ஃபுக்ஸ் டிஸ்ட்ரோபி உள்ளிட்ட கருவிழி நோய்களும் படிப்படியாக பார்வையைப் பாதிக்கக்கூடும்
கடுமையான வைட்டமின் ஏ குறைபாடு, தட்டம்மை, சுயகட்டுப்பாடற்ற நோயெதிர்ப்பு கோளாறுகள் மற்றும் சரியாகப் பராமரிக்கப்படாத வறண்ட கண் நோய் ஆகியவை கருவிழிப் பார்வையிழப்பிற்கு வழிவகுக்கும்.
எவ்வாறு தடுப்பது?
தொற்றுகளுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளித்தல், காண்டாக்ட் லென்ஸ்களை சரியாகப் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிதல் ஆகியவை அனைத்து வயதுப் பிரிவினரிடமும் கருவிழிப் பார்வையிழப்பைக் கணிசமாகக் குறைக்கும்.
கருவிழி வடு பார்வையை பெரிதளவில் பாதிக்கும் போது, நோயாளியின் சிகிச்சை முறைகள் மிகக் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையே மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும்.
கருவிழி பற்றாக்குறை
உலகளவில் அதிகமாக செய்யப்படும் திசு மாற்று அறுவை சிகிச்சைகளில் கருவிழி மாற்று சிகிச்சையும் ஒன்று. இருப்பினும், கண் தானத்தின் எண்ணிக்கையின் பற்றாக்குறை இன்றும் பெருமளவில் நிலவுகிறது.
இந்தியாவில், ஆண்டிற்குச் சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் கண்கள் தானமாக தேவைப்படும் நிலையில், சமீபத்திய ஆய்வுகளின்படி (2024-25) 69,848 கண்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், சேகரிக்கப்படும் கண்களில் 55% மட்டுமே அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடிய தரத்தில் உள்ளன. ஆண்டிற்கு 1,00,000 கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருந்தாலும், 30,000 முதல் 35,000 சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.
