கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து, சேவியர் உயர் கல்வி அமைப்புடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறை தலைவர் மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி உதவிப் பேராசிரியர் சங்கீதா, ‘தொல்லியல்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், தொல்லியலின் தொன்மை, பழங்கற்கால மக்களின் வாழ்வியல், உணவு முறைகள், கற்களை வடிவமைத்தல், கல் ஆயுதங்களைப் பயன்படுத்துதல், புதிய கற்காலம் உள்ளிட்டவை குறித்து விளக்கினார். இன்றைய மனிதர்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்த பல்வேறு கூறுகள் அக்காலத்திலேயே உருவாகியிருந்ததை எடுத்துரைத்தார்.
மேலும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் சான்றுகள், பண்டைய ஓவியங்களில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படாத நிலை, நடுகல், நினைவுத்தூண், சதிக்கல், சாவான் கல் உள்ளிட்டவை குறித்தும் மாணவிகளுக்கு விளக்கினார். அவற்றின் பயன்பாடு மற்றும் இன்றைய காலகட்டத்தில் அவற்றின் நிலை குறித்தும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
