பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 1964 முதல் 1969 வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தின் 2வது வார இறுதியில் ஒன்று கூடி, தங்களது கல்லூரி கால நினைவுகளையும் நட்பையும் புதுப்பித்து வரும் இக்குழுவினரின் சந்திப்பில், 35 முன்னாள் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
1964ம் ஆண்டு கல்லூரியில் இணைந்து பயின்றபோது உருவான நட்பு, கடந்த 57 ஆண்டுகளாக ஆலமரம்போல் வேரூன்றி, கிளைபரப்பி வளர்ந்து வருவதைப் போற்றும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது. கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், குடும்பத்தினருடன் கலந்துரையாடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டனர்.
