கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் முன்னாள் வேந்தர் குழந்தைவேல் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அவர் பேசுகையில்: நாட்டை குறை கூறுவதை விட, நாட்டை நேசிக்கும் மனப்பான்மையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் உள்ள ஆற்றலை தங்களது முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி பேசுகையில்: எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி ஆசிரியர்கள், இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. எத்தனால் கலப்பு எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், மின்சார வாகனங்களின் பயன்பாடும் எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். இதன் மூலம் கச்சா எண்ணெய் மீதான சார்பை குறைத்து, எரிசக்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக உருவெடுக்க முடியும் என்றார்.

தொடர்ந்து, முப்படைகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு சாகச நிகழ்ச்சிகள், கண்கவர் ட்ரோன் ஷோ நடைபெற்றது.
கல்வி, விளையாட்டு, ஆராய்ச்சி, புதுமை, நிறுவன வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
