ஈஷா கிராமோத்சவத்தின் 18-ஆவது பதிப்பிற்கான முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 அன்று கோலாகலமாகத் தொடங்கின. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு தொடங்கி வைத்தார்.

ஈஷா கிராமோத்சவத்தில் ஆண்களுக்கான கைப்பந்து மற்றும் பெண்களுக்கான எறிபந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இதில் பங்கேற்க அனுமதி இல்லை.

தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக.1 போட்டிகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

5. isha scaled

இதில் வாலிபால் பிரிவில் 2,400 அணிகளைச் சேர்ந்த 24,000 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 இடங்களில் 620 அணிகளைச் சேர்ந்த 6,200 வீரர்களும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் தலா 45 அணிகள் வீதம், இம்முதற்கட்டப் போட்டிகளில் மொத்தம் சுமார் 30,000 கிராமப்புற மக்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக இரண்டாம் கட்ட மண்டல (டிவிஷனல்) அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 3 மற்றும் 4-வது வார இறுதி நாட்களில் நடைபெறும். கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப்போட்டிகள் என மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவின் பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6-ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறவுள்ளன.