மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அபாயம் நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் ஜூலை 29 ஆம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் கோவை குற்றாலம் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், நீர்வரத்து மற்றும் வானிலை நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சூழ்நிலை சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் அனுமதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் போளுவாம்பட்டி வனச்சரகம் சார்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.