பீளமேடு ரயில் நிலையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும், சப்வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டம், மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து, ரொட்டிக் கடை மைதானத்தில் கருப்பு கொடி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பீளமேடு, காந்திமாநகர், சேரன் மாநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பீளமேடு சப்வே போராட்ட குழுவினர் பங்கேற்றனர்.
சப் வே இல்லாததால் ஏற்படும் சிரமங்கள் குறித்து பீளமேடு சப்வே போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கோபால் கூறுகையில்: பீளமேடு, காந்திமாநகர், சேரன்மாநகர், விளாங்குறிச்சியை சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் உள்ளன.
பீளமேடு ரயில் நிலையத்தின் ரயில்வே மேம்பாலம் கீழ் சப் வே இல்லாத காரணத்தால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தண்டவாளத்தை தாண்டி செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தண்டவாளத்தை கடக்க சிரமம் அடைகின்றனர்.
2017ம் ஆண்டில் பீளமேடு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளில் 26 பேர், இந்த ரயில் ட்ராக்கை கடக்கும் போது இறந்துள்ளனர். சுரங்கப் பாதை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், அதன் பிறகு எந்த கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை. இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை, இரும்பு குடோன்கள் உள்ளதால் சுரங்கப் பாதை அமைக்க தடங்கல் உள்ளது.
மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் தான் சுரங்கப் பாதை அமைக்க முடியும் என ரயில்வே துறையினர் கூறுகின்றனர். தேவையான 29.5 சென்ட் நிலத்தை மாவட்ட வருவாய்த்துறை கையகப்படுத்தி விட்டால் அடுத்த கட்ட பணிகளை தொடங்க முடியும்.
கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். இதற்காக தொடர்ந்து போராடியும் வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பாலத்தின் மேல் சைக்கிளை தள்ளி செல்கின்றனர். வாகனங்கள் அதிகம் செல்வதால் இப்படி செல்வது ஆபத்தானது. மாலை 6 மணிக்கு மேல் இந்த தண்டவாளத்தை கடந்து செல்வதில் பெண்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. தெருவிளக்கு வெளிச்சமும் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
