திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் வசித்து வரும் தமிழ்செல்வன் ஜோதிமணி ஆகியோரின் மகன் குணசீலன் (24). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 15ம் தேதி காலை 10.45மணிக்கு உணவு உண்ணும்பொழுது புரையேறி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அவரது பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையம் & காவல்துறை அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், கண்கள், எலும்பு, தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில்: மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும் என்று கூறினார்.
