தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள், தவெக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கங்கா யமுனா காவேரி திரையரங்கில் தவெகவினர் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டனர். திரையரங்கு பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

இந்த திரையரங்கில் திரைப்படத்தை காண அமைச்சர் சம்பத்குமார் வருகை புரிந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசுகையில்: இது எங்களுக்கு நெகிழ்ச்சியான தருணம். முதல் நாள் காட்சி எங்களுக்கு கடைசிக் காட்சியாக தோன்றுகிறது. மனதிற்குள் வலி இருந்தாலும், நாட்டுக்கு தேவை, மக்களுக்கு தேவை என்பதை உணர்ந்து வலிகளை தாங்கிக் கொண்டு வந்துள்ளோம்.

ரசிகன் என்பதே என்னுடைய முதல் அடையாளம். ஏற்கனவே முதல்வர் வகுத்த பாதையில் தான் பயணித்து கொண்டிருந்தேன். தற்போது எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை நல்லமுறையில் செயல்படுத்துவேன்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத கொண்டாட்டங்கள் நடத்துவது வரவேற்கத்தக்கது. யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தான் எங்கள் கொண்டாட்டங்கள் இருந்து வருகிறது. ஆன்லைனில் திரைப்படம் வெளியாகி என்ன சதித்திட்டம் செய்தாலும், திரையரங்குகளில் பார்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. மக்களுக்கான பணியை தலைவர் ஆற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.