ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இணையத்தின் அதிகப்படியான பயன்பாடு, இளைஞர்களின் நினைவாற்றல் மற்றும் கவனத் திறனை பாதிக்கும் புதிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனை மருத்துவர்கள் ‘டிஜிட்டல் மறதி’ எனக் குறிப்பிடுகின்றனர்.
முன்பெல்லாம் எண்கள், முகவரிகள், முக்கிய தகவல்கள் போன்றவற்றை மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்த மக்கள், தற்போது எல்லாவற்றுக்கும் கூகுள் தேடல், ஸ்மார்ட்ஃபோன் குறிப்புகள், கிளவுட் சேமிப்பு போன்றவற்றையே அதிகமாக நம்பியிருக்கின்றனர். இதன் விளைவாக, தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும் மூளையின் இயல்பான செயல்பாடு குறையக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், 15 முதல் 30 விநாடிகள் மட்டுமே நீடிக்கும் ரீல்ஸ் மற்றும் குறும் வீடியோக்கள் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களைப் பார்ப்பதால், மூளையில் டோப்பமைன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இதுவே மேலும் மேலும் புதிய வீடியோக்களைப் பார்க்கும் தூண்டுதலை ஏற்படுத்தி, ஒரு வகையான டிஜிட்டல் பழக்கமாக மாறுகிறது.
நரம்பியல் மருத்துவர்களின் கூற்றுப்படி, சுமார் 25 வயது வரை தொடர்ந்து வளர்ச்சியடையும் மூளையின் முன்பகுதி, திட்டமிடுதல், முடிவெடுத்தல், கவனம் செலுத்துதல், சிந்தனைத் திறன் மற்றும் சுயகட்டுப்பாடு போன்ற முக்கிய செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.
இந்த காலகட்டத்தில் அதிகப்படியான திரைநேரம் மற்றும் குறும் வீடியோ பயன்பாடு, கவனச் சிதறல் மற்றும் தகவல்களை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதும் மற்றொரு முக்கிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது. திரையிலிருந்து வெளிப்படும் நீல ஒளி, உடலில் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பைக் குறைக்கிறது.
இதனால் தூக்கமின்மை ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக கவனக்குறைவு, மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டிஜிட்டல் பழக்கவழக்கத்தை மாற்றுவதில் பெற்றோரின் பங்கும் முக்கியமானது. குழந்தைகளிடம் மொபைல் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லும் பெற்றோர், முதலில் தங்களது திரைநேரத்தைக் கட்டுப்படுத்தி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
