2004ம் ஆண்டில் டாடா குழுமத்தின் அப்போதைய தலைவரான ரத்தன் டாடா, அவரின் டாடா குழுமத்தின் மேல் தனக்குள்ள கனவை இரத்தின சுருக்கமாக அறிவித்தார் – “100 ஆண்டுகளில் இந்தியாவை கடந்து டாடா குழுமத்தின் சிறகுகள் பறந்திருக்க வேண்டும்”.

அவருக்கு டாடா என்பது இப்போது நமது நாட்டில் அது பெற்றுள்ள இதே நம்பிக்கையை உலகம் முழுக்க அறியப்படும் ஒரு இந்திய பன்னாட்டு தொழில் சாம்ராஜியமாக இருக்கவேண்டும் எனும் விருப்பம் இருந்தது.

100 ஆண்டுகளில் டாடா அப்படி இருக்கும் என கனவு கண்டு, அதை நிறைவேற்ற அவர் காலத்தில் நடவடிக்கைகளை எடுத்துவந்தார். இப்போதைய டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் மற்றும் டாடா குழும தலைவரான சந்திரசேகரனின் வழிகாட்டுதல் கீழ் அந்த மாபெரும் கனவு வேகமாக மெய்ப்பட்டு வருகிறது.

அதில் ஒன்று தான் டாடா குழுமத்தின் தற்போதைய கையகப்படுத்தும் நடவடிக்கை. இத்தாலி நாட்டின் கமெர்சியல் வாகன நிறுவனமான ஐவெக்கோ-வை (IVECO) ரூ.38,000+ கோடிக்கு வாங்கும் நடவடிக்கையை துவங்கி அதை நிறைவு செய்ய உள்ளது. இதனால் உலக அளவில் டாடா- ஐவெக்கோ 4ம் பெரிய கமெர்சியல் வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்கும். உலகின் பல நாடுகளில் டாடாவின் வியாபாரம், சேவை விரிவாக்கம் ஆகும்.

அமெரிக்கா, கனடா, யூ.கே. ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் டீ தூள் நிறுவனமான டெட்லே (Tetley) 2000ம் ஆண்டில் டாடா வசம் ஆனது. உலகின் 2ம் பெரிய டீ நிறுவனம் இதுதான்.

2000ம் ஆண்டில் துவங்கிய இந்த கையகப்படுத்தலை தொடர்ந்து, டாடா குழுமம், ஐரோப்பாவின் 2ம் மிக பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான கோரஸ் குழுமத்தை (Corus) 2007ல் காயகப்படுத்தியது. இதை தவிர பெரும் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார் (Jaguar),  லேண்ட் ரோவர் (Land Rover),  பிரிட்டனை சேர்ந்த மிகப்பெரும் ரசாயன தயாரிப்பு நிறுவனமா ப்ரன்னர் மொண்ட (Brunner Mond), தென் கோரிய கமெர்சியல் வாகன நிறுவனமான தேவவூ (Daewoo); சிங்கப்பூரின் நாட் ஸ்டீல் (NatSteel), தாய்லாந்தின் மில்லேனியம் ஸ்டீல் (Millennium Steel) என இந்த பட்டியல் மிக நீண்டது.

ரத்தன் டாடா காலத்தில் செய்த சாதனைகள் ஏராளம். இப்போதே டாடா மிக பெரும் சர்வதேச நிறுவனமாக கருதப்படும் நிலையில் நிச்சயம் 2104ல் அது உலகம் முழுக்க தனது சிறகை விரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.