கோவையில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக் கூறி, பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் சம்பத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர் ஒருவர், தண்ணீர் கேனில் பெட்ரோல் கேட்டுள்ளார். பெட்ரோல் பங்க் ஊழியர் அரசு விதிகளின் படி அப்படி தர முடியாது என கூறியதற்கு, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் “நான் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர். என்னை எதுவும் செய்ய முடியாது” என்று மிரட்டி தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ஊழியர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அமைச்சர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அண்மையில் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற அராஜக மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அரசு உரிய சட்டபூர்வ மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கும். எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை.
பொதுமக்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் எவருக்கும் இந்த அரசு எவ்விதத்திலும் சாதகமாக இருக்காது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், அராஜகத்தை ஒடுக்குவதிலும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எந்தவொரு சூழ்நிலையிலும், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்பது திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தப்படுகிறது.
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையை மிகத் தீவிரமாகச் செய்யும். அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்படுகிறது.
