தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்ற அறிவிப்பிற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சைமா தலைவர் துரை பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ஜவுளித் துறையின் போட்டித்திறன், அரசாங்கத்தால் தொடர்ந்து உயர்த்தப்படும் மின் கட்டணங்களால் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் டிமாண்ட் கட்டணத்தை மெகா வாட் ஒன்றிக்கு ரூபாய் 350-லிருந்து 57 சதவீதம் உயர்த்தி, ரூபாய் 550 உயர்த்தியது. மேலும் மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.608 ஆக உயர்த்தியது.
இது அதிக மின்சாரம் தேவைப்படும் ஜவுளித் துறையை பெரிதும் பாதித்துள்ளது. ஜவுளித் துறையின் மின்சாரச் செலவு, மொத்த உற்பத்திச் செலவில் கிட்டத்தட்ட 40-45% ஆகும்.
வீட்டு உபயோக நுகர்வோருக்கான மின் கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மின் கட்டண உயர்வானது, மாநிலத்தில் பல ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படுவதற்கும், அதன் விளைவாக அரசு கருவூலத்தின் வருவாயைப் பாதிப்பதோடு, பல லட்சம் மக்கள் வேலை இழப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் குழு தமிழக முதலமைச்சரை சந்தித்து, நடப்பு ஆண்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் மின் கட்டண உயர்வு எதுவும் அமல்படுத்தப்படாது என்ற அறிவிப்புக்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய், எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. இந்த அறிவிப்பு, 2035-ஆம் ஆண்டுக்குள் தமிழக அரசு 1.5 டிரில்லியன் அமெரிக்கா டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு வழிவகுக்கும் ஒரு சரியான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்
