இளநிலை மாணவர்களை வரவேற்ற கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
“என் பாட்டி கிராமத்தை சேர்ந்தவர், அவர் கல்வி கற்றதில்லை ஆனால் அவர் என் தாயை கல்வி கற்க வைத்தார், அதனால் எனது தாய் என்னை படிக்கவைத்தார்.”
இதன் விளைவாகவே இன்று சென்னையில் இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறைக்கு நான் தலைமை ஏற்க முடிந்தது. எந்த ஒரு தலைமுறை கல்வி கற்கிறதோ, அது அதன் மொத்த குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றிக்கொள்ளும்,” இவ்வாறு கோவை கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 கல்வி ஆண்டில் புதிதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார் ‘மாற்றம் அறக்கட்டளை’ நிறுவனர் சுஜித் குமார்.
2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு துறைகளில் இளநிலை பட்டம் பயில சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு, கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கல்லூரியின் சிறந்த முன்னாள் மாணவர்கள் மூவர் – காயத்ரி, வால்மார்ட் கோ போர்ஜ், சென்னை நிறுவனத்தின் குழுத் தலைவர்; பால கோகுல் வர்தன், பெங்களூரு இ & வை நிறுவனத்தின் மூத்த வரி மேலாளர் மற்றும் அபிநகா, சென்னை அசா அப்லாய்நிறுவனத்தின் ஆட்டோமேஷன் டெவலப்பர் – சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்வி நிறுவனங்களின் எதிர்கால திட்டங்கள் இயக்குனர் ஆத்விக் கோவிந் அசோக்; கல்லூரி முதல்வர் வித்யா, செயலாளர் வனிதா, கல்லூரியின் சி.ஒ.ஈ. கவிதா, துறை தலைவர்கள், பேராசியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய சுஜித் குமார், “ஆண் பிள்ளையை படிக்கவைத்தால் அவன் குடும்பத்தை காப்பாற்றுவான், பெண் பிள்ளைக்கு கல்லூரி கல்வி தேவையா என நினைக்கும் சூழல் இன்றைய காலகட்டத்தில் கூட தொடருகிறது. பெற்றோர்களே, உங்கள் மகளையும் உயர்கல்வி கற்க வையுங்கள், அவளும் நிச்சயம் உங்களை காப்பாற்றுவாள்,” என கூறினார்.

சிரமங்களை கடந்து கல்வி…
தொடர்ந்து அவர் பேசுகையில் 2020ல் ‘மாற்றம் அறக்கட்டளை’ சார்பில் சென்னை நகரத்தின் எல்லை பகுதியில் உள்ள திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
திருப்போரூர் அருகே அமைந்துள்ள ஒரு அரசு பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் லைப்ரரி அமைத்து தர மாற்றம் அறக்கட்டளை நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது, அந்த பள்ளியில் கூடுதலாக வேறு ஏதாவது அத்தியாவசிய வசதிகள் தேவையா? என்று கேட்ட போது, ஆசிரியர் ஒருவர் தங்கள் பள்ளியில் உதவி செய்ய இரண்டு உதவியாளர்களை நியமிக்க வேண்டும், அவர்களுக்கான மாத ஊதியத்தை அறக்கட்டளை ஏற்க முடியுமா? என்று கேட்டுக் கொண்டார்.
அவ்வாறு கேட்க காரணம், இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் அதன் அருகே மாலை நேரங்களில் மது குடிப்பவர்கள் காலி பாட்டில்களை பள்ளி வளாகத்திற்குள்ளேயே வீசி உடைக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர், அவ்வாறு உடைந்த அந்த கண்ணாடி துகள்களை அகற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் முயற்சி எடுக்கின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த வேலையை செய்ய பிற பணியாளர்கள் இருந்தால் கல்வி கற்றுக் கொடுப்பதில், கற்பதில் இருக்கும் தடைகள் நீங்கும் என்று அந்த ஆசிரியர் கூறினார்.
சௌகரியமான சூழலில் நல்ல கல்வி கிடைப்பது என்பது அனைவருக்கும் எளிதில் அமையும் ஒன்றல்ல என்பதை இது உணர்த்துகிறது.
துயரங்களை கடந்து கல்வி…
அதே பள்ளியில் அதற்கான உதவி வழங்கிய பின்பு, அங்கிருக்கும் மாணவி ஒருவர் தங்களுக்கு கழிப்பிட வசதி இங்கே இல்லாத காரணத்தால் 8ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் பலரும் பள்ளி கல்வியை பாதியிலேயே விட்டு செல்கின்றனர். எனவே, ஒரு கழிவறையை கட்டித் தர முடியுமா என்று வேண்டுகோள் விடுத்தார்.
“வீட்டில் போய் பள்ளியில் கழிப்பிடம் இல்லை என சொன்னால், வறுமையை காரணம் பள்ளி செல்வதை நிறுத்திக்கொண்டு பணிக்கு செல்ல தான் சொல்வார்கள். ஆனால் எங்களுக்கு கல்வி கற்க வேண்டும். எங்களுக்கு உதவுவீர்களா?” என அந்த மாணவி என்னை நோக்கி கேட்டார்.
இது போன்ற ஒரு சிரமம் தனியார் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படுமா? நிச்சயமா இருக்காது. எனவே நல்லதொரு தனியார் பள்ளியில் படித்து இன்று இப்படியொரு சிறப்பான கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுடைய பெற்றோர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்.
அந்த வசதியை செய்து கொடுத்த பின்னர் அதே மாணவி ‘மாற்றம் அறக்கட்டளை’ மூலம் 2021ல் உயர்கல்வி பயில தேர்வு செய்யப்பட்டார். அந்த மாணவி சிறப்பாக கல்லூரி பயின்று, இன்று ஆண்டுக்கு ரூ.17 லட்சம் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து பெங்களூரில் உள்ள ஒரு மிகப்பெரிய தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிகிறார்.
பெற்றோரின் தியாகத்தால் கல்வி…
இன்று தனியார் கல்லூரிகளில் மிகப்பெரிய கல்விக் கட்டணத்தை செலுத்தி தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். மாணவர்கள் தங்கள் விரும்பும் பாடத்தை பெற்றோர்கள் படிக்க வைக்க செய்யும் அவர்கள் செய்யும் தியாகங்களை ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உங்களை இப்படியொரு கல்லூரியில் கல்வி கற்க வைக்க, உங்களுடைய தாயின் கையில் அணிந்த தங்க வளையலோ, அவர் அணிந்திருந்த மோதிரமோ, தங்கச் சங்கிலியோ அடமானம் வைக்கப்பட்டிருக்கலாம். எத்தனையோ இழிவான பேச்சுக்களை உங்கள் தந்தை தாங்கிக் கொண்டு உங்களுக்காக கடுமையாக உழைத்து கல்விக்கான கட்டணத்தை செலுத்தி இருக்கலாம்.
நல்ல கல்வியை பிள்ளைகள் பெற இங்கு ஒரு போராட்டமே அனைவரின் வாழ்க்கையிலும் நடந்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்டு அருமையாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்கு படித்து பெற்றோருக்கு பெருமை சேருங்கள்.
கல்லூரி நாட்களில் நல்ல வேலைவாய்ப்பை பெறுவதை தாண்டி, நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டு கவனத்தை சிதற விடாமல் உங்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
