சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஹோப்ஸ் பகுதி அருகே உள்ள யாழ் யோகா அமைப்பின் சார்பில் சிறப்பு யோகா நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஹோப்ஸ் பகுதியின் ஸ்ரீ நகரில் அமைந்திருக்கும் இந்த மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 135-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இன்று காலை சரியாக 6 மணிக்கு துவங்கிய இவ்விழாவின் முதல் நிகழ்வாக, மையத்தின் மாணவிகள் மற்றும் பெண்கள் இணைந்து பாரம்பரிய முறைப்படி கும்பம் எடுத்து வந்து, குத்துவிளக்கேற்றி விழாவை மங்களகரமாக துவக்கி வைத்தனர்.
இதில் பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அனைவரும் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடி யோகா பயிற்சிகளைத் தொடங்கினர்.
யாழ் யோகா அமைப்பின் நிறுவனரும் இயக்குநருமான டி.எஸ். மோகன்ராஜ் இந்த சிறப்பு யோகா அமர்விற்கு தலைமை தாங்கி நடத்தினார். இங்கு 8 வயது சிறுவர்கள் முதல் 85 வயது முதியவர்கள் வரை யோகாவை மிக ஆர்வமுடன் கற்று வருவதுதான். மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் 10 நிமிடங்கள் கூட்டு தியானம் நடைபெற்றது.

தியானத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு ஆசனங்கள் மற்றும் சூரிய நமஸ்காரப் பயிற்சிகளை உறுப்பினர்கள் மேற்கொண்டனர்.
ஆசனங்களுடன் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) இணைத்து சிறப்பு பயிற்சிகள் நடைபெற்றன. சுமார் 8 நிமிடங்கள் உறுப்பினர்களுக்குச் சிரிப்பு யோகா (Laughing Therapy) பயிற்சி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, யோகா மையத்தைச் சேர்ந்த 13 சிறுவர், சிறுமிகள் மேடையில் ஏறி தங்களது யோகா திறமைகளை தனித்தனியாகச் செய்து காண்பித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். அதேபோல், சுமார் 10 பெண் உறுப்பினர்களும், 16 ஆண் உறுப்பினர்களும் மேடையில் தங்களின் யோகாசனங்களைச் செய்து காட்டினர்.
மேடையில் திறமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் தனிநபர் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
