சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகத் துறை சார்பில், “சிறப்பையும், வெற்றியையும், வாழ்க்கை ஒற்றுமையையும் நோக்கி சுய முன்னேற்றம்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு சமீபத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணைய உறுப்பினரும், ஓ.என்.ஜி.சி,புதுதில்லி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மனிதவள இயக்குநருமான அல்கா மிட்டல் கலந்துகொண்டு ஊக்கமூட்டும் உரையாற்றினார்.
தனது விரிவான தலைமைத்துவ அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், சுய விழிப்புணர்வு, மன உறுதி, நெறிமுறை மதிப்புகள் மற்றும் உணர்ச்சி சமநிலை ஆகியவை சிறப்பையும் நீண்டகால வெற்றியையும் அடைவதற்கு இன்றியமையாதவை என்று எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் தங்களது இலக்குகளில் உறுதியாக கவனம் செலுத்தி, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சமநிலையை பேண வேண்டும் என வலியுறுத்தினார்.
இச்சிறப்பு சொற்பொழிவு தலைமைத்துவம், தொழில் வளர்ச்சி, தனிமனித மேம்பாடு மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றைப் பற்றிய மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்வதற்கும், வேகமாக மாறிவரும் உலகில் சிறந்து விளங்குவதற்குமான நடைமுறை அறிவுரைகளைப் பெற்றனர்.
நிகழ்வின் துவக்கத்தில் சுகுணா அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன் தலைமையுரை வழங்கினார்
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் வி. சேகர் பாராட்டுரை வழங்கி, தனது அனுபவங்களைப் பகிர்ந்து மாணவர்களை ஊக்குவித்த சிறப்பு விருந்தினருக்கு நன்றியைத் தெரிவித்தார்.
கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் மற்றும் துறைத்தலைவர் மீனாட்சி சாராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
