கோவை நவ இந்தியா சிக்னல், ராஜேந்திர பிரசாத் சாலையில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
நவ இந்தியா சிக்னல் வழியே தினமும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இங்கு கல்லூரிகள், பல் மருத்துவமனை, உணவகங்கள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவை உள்ளதால் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகம் இருக்கும். அதேபோல ஆம்னி பேருந்துகள், கட்டுமான பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், டெம்போக்கள் இந்த வழியே அதிகம் பயணிக்கும்.

இந்த சாலையைப் பயன்படுத்தி காந்திபுரம், அவிநாசி சாலை, சிங்காநல்லுர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். இந்த சாலையில் காலை, மதியம், மாலை, இரவில் என அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த வழியே பயணம் செய்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை நவ இந்தியா சிக்னல் செல்லும் ராஜேந்திர பிரசாத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக, அரை கிலோமீட்டர் தூரம் வரையிலும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில் மூன்று இளைஞர்கள் சாலையில் நடுவே நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சாலையில் இதுபோல அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படும் நிலையில், போக்குவரத்து காவலர் இதனை சரி செய்தால், நிலைமை ஓரளவு கட்டுக்குள் வரும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
