தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணும் நோக்கில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்களை நிறுவும் புதிய திட்டத்தை டாஸ்மாக் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் சோதனை அடிப்படையில் அதிநவீன ஏஐ தானியங்கி இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் மூலம், டாஸ்மாக் ஊழியர்களின் தலையீடு இன்றி, வாடிக்கையாளர்கள் தாங்களாகவே காலி மதுபாட்டில்களை ஒப்படைத்து, அதற்கான ரூ.10 தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை அல்லது ரொக்கமாக நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

இயந்திரத்தில் முதலில் பாட்டிலின் பார்கோடு ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் பாட்டிலை உள்ளே செலுத்தியதும், அது அந்தக் கடையில் விற்கப்பட்ட பாட்டில்தானா, பாட்டில் சேதமின்றி முழுமையாக உள்ளதா என்பதனை ஏஐ தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கும். அனைத்து தகவல்களும் உறுதி செய்யப்பட்ட பின்னரே, ரூ.10 திரும்பப் பெறும் வசதி செயல்படுத்தப்படும்.

மேலும், அந்த குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களை மட்டுமே இயந்திரம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிற கடைகளில் வாங்கிய பாட்டில்களை இந்த இயந்திரத்தில் செலுத்தி பணம் பெற முடியாது.

சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எழும்பூரில் மேற்கொள்ளப்படும் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், இந்த தானியங்கி பாட்டில் திரும்பப் பெறும் இயந்திரங்கள் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிறுவப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.