சாதாரண டீக்கடைகள் முதல் உணவகங்கள் வரை உணவுத்துறை சார்ந்த அனைவரும் தாங்கள் வழங்கும் பார்சல் சேவையில்  வெறும் செய்தித்தாள்களை கொண்டு வடை, போண்டா போன்ற பலகாரங்கள் மற்றும் பிற உணவுகளை மடித்து கொடுக்கும் வழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்  சில நாட்களுக்கு முன் அறிவுறுத்தலை வழங்கியது.

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை உணவுப் பொருட்களில் படிந்து அது உடலுக்கு செல்லும் போது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

இதற்கு பதில் வாழை இலை, பட்டர் பேப்பர் போன்ற மாற்று பொருட்களைக் கொண்டு பார்சல் சேவைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அலட்சியம்!

உணவகங்களுக்கும் டீக்கடைகளில் பார்சல் சேவைகளுக்காக இவை பயன்படுத்தப்படும் போது, பழைய பேப்பர் கடைகளிலேயே பெரும்பாலானோர் அதை ‘எடைக்கு இவ்வளவு’ என்ற அளவில் வாங்குகின்றனர்.

ஏற்கனவே இந்த பேப்பர்கள், பேப்பர் கடையில் சில மாதங்கள் முதல் வருட கணக்கில் கூட குவிந்து கிடக்கும். இதனாலேயே அந்த காகிதங்களில் தூசியும் குப்பைகளும் ஒட்டிக்கொள்ளும்.  டீக்கடைகள் பேக்கரிகள் மற்றும் சிறு உணவகங்களில் சூடான பலகாரங்களை  இப்படிப்பட்ட பேப்பர்களின் மேல் வைக்கும் போது, அதனில் இருக்கும் குப்பையும் தூசியும் மையும் அதில் கலந்துள்ள வேதிப்பொருளும் உணவில் ஒட்டிக் கொள்ளும்.

உயிருடனே ஒன்றாகும்…

உணவுத்துறை என்பது மருத்துவத் துறைக்கு அடுத்து மிக மிக உன்னதமான ஒரு துறை என்று தனிப்பட்ட முறையில் பலரும் கருதுகின்றனர், ஏனென்றால் மருந்தை போல உணவும் உயிரோடு கலக்கும் ஒன்று என்பதே.கைபேசியோ, உடையோ, காலனிகளோ, கை-பைகளோ, கடிகாரங்களோ எவையும் உயிரோடு கலப்பதில்லை.ஆனால் உண்ணும் உணவும் பருகும் நீரும் உயிருடன் கலக்கிறது.எனவே உணவுத்துறையில் ஈடுபடுவோர் அனைவருமே வெறும் லாபத்தையும், சிக்கனத்தையும் தாண்டி வாடிக்கையாளர்களின் நலன் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

பார்சலுக்கு செய்தித்தாள்களை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தியும் இன்றும் கூட சிறு உணவகங்களில் டீக்கடைகளில் இந்த நடைமுறை தொடர்கிறது. எனவே உணவுத்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், வாடிக்கையாளர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.