கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முக்கிய காரணமாக இருந்தார். நாட்டின் பின்னடைவுக்கு அவரை குற்றம்சாட்டுவது தவறானது. விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் உருவாகவும் நேருவின் ஆட்சி அடித்தளமாக அமைந்தது.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. நாட்டின் கல்வி அமைப்பு சீர்குலைந்துள்ளது. மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களையும் கூலியையும் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து தேவையான நிதியை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் நேரடியாக ஆலோசனை நடத்த வேண்டும்.
அரசியல் கூட்டணி குறித்து பேசிய வீரபாண்டியன், திமுக கூட்டணியில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.எதிர்காலத்தில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து கட்சி முடிவு எடுக்கும். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் எந்தவித உறவும் இல்லை. அவர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை கட்சி தொடர்ந்து கடைப்பிடிக்கும்.
பிரதமரை சந்தித்தபின் முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். ஊடகம் இல்லாவிட்டால் ஜனநாயகம் குருடாகிவிடும். எந்த தொலைக்காட்சி சேனலையும் முடக்கக் கூடாது, யூடியூபர்களை கைது செய்யக் கூடாது என்றார்.
