பெண் குழந்தைகள் சிக்கன் சாப்பிட்டால் விரைவில் பருவமடைவார்கள், பிராய்லர் கோழிகளில் ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன, கர்ப்பிணிப் பெண்கள் சிக்கன் சாப்பிடக்கூடாது போன்ற கருத்துக்கள் நிலவுவதைப் பார்க்க முடிகிறது.

இவை அறிவியல் பூர்வமாக உண்மையா என்பது குறித்து குழந்தை நல மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் டாக்டர் அருண்குமார் வீடியோ ஒன்றில் விவரித்து கூறியுள்ளார்.

WhatsApp Image 2026 06 10 at 6.09.35 PM

சிக்கன் சாப்பிட்டால் சீக்கிரம் பருவமடைவார்களா?

பெண் குழந்தைகள் சீக்கிரம் பருவமடைய சிக்கன் ஒரு முக்கிய காரணம் என பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். கடந்த சில நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும் பெண்கள் பருவமடையும் வயது படிப்படியாகக் குறைந்துள்ளது. முன்பு 16-17 வயதில் ஏற்பட்ட பருவமடைதல், தற்போது அதற்கு முன்பே ஏற்படுகிறது.

மருத்துவ ஆய்வுகளின்படி, இதற்கான முக்கிய காரணம் மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் நல்ல உணவுப் பழக்கங்கள் ஆகும். குறிப்பாக புரதம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதால், பருவமடைதல் இயல்பாகவே விரைவாக ஏற்படலாம். ஆனால், சீக்கிரம் பருவமடைவதற்கு சிக்கன் சாப்பிடுவதுதான் காரணம் என்று எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.

பல ஆய்வுகள் சைவ உணவு உண்பவர்களையும் அசைவ உணவு உண்பவர்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது, பருவமடையும் வயதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பெண் குழந்தைகள் சிக்கன் சாப்பிடுவதால் மட்டுமே விரைவில் பருவமடைகிறார்கள் என்பது ஒரு தவறான நம்பிக்கை.

பிராய்லர் கோழிகளில் ஹார்மோன் ஊசிகள் போடப்படுகிறதா?

உண்மையில், வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் அனபாலிக் ஸ்டீராய்டுகள் மிகவும் விலையுயர்ந்தவை. ஒரு கோழிக்கு தேவையான அளவு ஹார்மோன் பயன்படுத்தினால் அதன் விலை பல ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். வணிக ரீதியாக இது சாத்தியமற்றது.

அப்படியானால் பிராய்லர் கோழிகள் எப்படி வேகமாக வளர்கின்றன என கேள்வி எழும். பிராய்லர் கோழிகள் என்பது இயற்கையாகவே வேகமாக வளரக்கூடிய தனிப்பட்ட இனம். குறிப்பாக “கார்னிஷ் கிராஸ்” போன்ற இனங்கள் குறுகிய காலத்தில் அதிக எடையை அடையும் தன்மை கொண்டவை. மேலும், அவற்றுக்காக கால்நடை ஊட்டச்சத்து நிபுணர்கள் திட்டமிட்டு தயாரிக்கும் சத்தான தீவனங்கள் வழங்கப்படுகின்றன. இதுவே அவற்றின் வேகமான வளர்ச்சிக்கான முக்கிய காரணம்.

கோழிகளுக்கு போடும் ஊசிகள், பலர் நினைப்பது போல ஹார்மோன் ஊசிகள் அல்ல. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது போல, கோழிகளுக்கும் பல நோய்களைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் பிராய்லர் கோழிகளுக்கும், நாட்டுக்கோழிகளுக்கும் போடப்படுகின்றன.

ஹார்மோன் சமநிலையின்மை

பல பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினைகள் இருக்கும் போது, சிக்கனைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக, இதற்கு முக்கிய காரணம் இன்சுலின் எதிர்ப்பு ஆகும். இது உடலில் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இந்நிலையில் போதுமான புரதச்சத்து மிகவும் அவசியம். சிக்கன், முட்டை போன்றவை புரத ஆதாரங்களாக உள்ளன.

கர்ப்பிணிப் பெண்கள் சிக்கன் சாப்பிடலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அதிகளவு புரதம், இரும்பு, துத்தநாகம், கோலின் போன்ற ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவை கருவில் வளரும் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு முக்கியமானவை. சிக்கன், முட்டை ஆகியவை இந்த ஊட்டச்சத்துக்களை வழங்கும் சிறந்த உணவுகள். எனவே, சிக்கன் உடலில் சூட்டை அதிகரிக்கும் என்ற காரணத்தால் அதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சிக்கன் சாப்பிடலாமா?

சிக்கன் சாப்பிடுவதால் குழந்தைக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிக காரம் மற்றும் மசாலா சேர்த்து சமைத்த உணவுகள் சில நேரங்களில் குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதனால் காரத்தை குறைத்து சமைத்து சாப்பிடலாம். சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மெனோபாஸ் காலத்தில் சிக்கனை தவிர்க்க வேண்டுமா?

பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவதால் எலும்புகள் பலவீனமடையும் அபாயம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் போதுமான புரதச்சத்து இல்லையெனில் தசை இழப்பு ஏற்படலாம். எனவே, நல்ல புரத உணவுகள், உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுமுறை மிகவும் அவசியம்.

முதியவர்களும் சிக்கன் சாப்பிடலாமா?

60-70 வயதிற்குப் பிறகும் உடலின் தசை வலிமையை பராமரிக்க புரதச்சத்து தேவைப்படுகிறது. எனவே, சிக்கன் மற்றும் முட்டை போன்ற உணவுகளை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் தொடர்ந்து சாப்பிடலாம்.

சிக்கன் சாப்பிடுவதால் ஹார்மோன், கருத்தரிப்பு, விரைவில் பருவமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை. ஆனால், சிக்கனை நன்றாக சமைக்காமல் சாப்பிட்டால் சால்மொனெல்லா போன்ற பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சுத்தமாகவும் முழுமையாக வேக வைத்தும் சாப்பிடுவது மிகவும் முக்கியம் என டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.