கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களால் இவை வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இவை இந்தியா சார்பாக, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

குமரகுரு வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஐஎன்எஸ் அக்ரானி செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார் மற்றும் பெங்களூரு 6த் எலிமெண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான கிரெய்க் மரியோ டி’மெல்லோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்தனர்.

‘டீம் இன்கிராஃப்ட்’ உருவாக்கியுள்ள மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை நடைபெறும் ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது.
இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்குத் தேர்வான ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனமாகும்.

அதேபோல், ‘டீம் சீ சக்தி’ உருவாக்கியுள்ள ஐந்தாம் தலைமுறை மின்சார பந்தயப் படகான ‘யாலி 5.0’, ஜூலை 8 முதல் 11 வரை மொனாக்கோவில் நடைபெறும் மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்ச் போட்டியில் பங்கேற்கிறது.