வருங்கால அரசியலில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆகியோர் முக்கிய சக்திகளாக இருப்பார்கள் என முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாமலை புதிய அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இயக்கம் அனைத்து அரசியல் இயக்கங்களையும் பின்னுக்குத் தள்ளி முன்னணிக்கு வரும். தற்போது உயர்கல்வி மற்றும் உயர்பதவிகளில் உள்ள பொதுமக்கள் உட்பட பலர் இதில் இணைந்து வருகின்றனர்.

மேலும், பாஜகவிலிருந்து மட்டுமல்லாமல் இதுவரை அரசியலுடன் தொடர்பில்லாத பொதுமக்களும் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். அண்ணாமலையின் நேர்மையான அரசியல் அணுகுமுறையே இதற்கு காரணம்.

தமிழக மக்களின் நலனை மையமாகக் கொண்ட அரசியலே முன்னெடுக்கப்படும். அண்ணாமலை முன்வைக்கும் கொள்கைகளே இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளாக இருக்கும்.

பாஜக ஒரு தேசிய அளவிலான பெரிய இயக்கம் என்பதால் அது பலவீனமடைந்துவிட்டது என்று கூறுவது தவறு. அண்ணாமலையின் வேகம் மற்றும் அரசியல் செயல்பாட்டு பாணிக்கு ஏற்ற சுதந்திரமான சூழல் தேவைப்பட்டதால் அவர் தனிப் பாதையை தேர்வு செய்தார். தவறுகள் எங்கு நடந்தாலும் உடனடியாக கேள்வி எழுப்பும் தன்மையே அண்ணாமலையின் முக்கிய குணம்.

பாஜகவின் சித்தாந்தம் வேறு, தங்களது சிந்தனை வேறு இருக்கும். அண்ணாமலைக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று கூறுவோர் பலர் ராஜினாமா செய்து அவருடன் இணைந்து வருவதை கவனிக்க வேண்டும்.

அண்ணாமலை ஒரு கட்சியில் நிர்வாகியாக இருப்பதை விட சுயமாக முடிவெடுக்கக்கூடிய தலைவராக இருக்க விரும்புகிறார். அதற்காகவே அவர் தனி அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளார்.

வருங்கால அரசியலில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆகியோர் முக்கிய சக்திகளாக இருப்பார்கள்.  தமிழகத்திற்கு அறிவார்ந்த நிர்வாகம் தேவைப்படுகிறது.  எங்களின் அரசியலில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. நேர்மையான அரசியலை விரும்பும் பொதுமக்களே எங்களின் இலக்கு. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைத் தாண்டி தவெக உருவாகியுள்ள நிலையில், அதையும் தாண்டி எங்களது இயக்கம் மிகப்பெரிய அரசியல் சக்தியாக வளரும் என்றார்.