சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலம் இந்தாண்டு (2026-27) 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா இன்று தமிழகம் மற்றும் புதுவையில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

சென்னையில் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சைதை எம்எல்ஏ அருள் பிரகாசம், திரைப்பட தயாரிப்பாளர், இசைக்கலைஞர் ஷோபா சந்திரசேகர், அன்னை வேளாங்கண்ணி கல்லூரித் தலைவர் தேவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பணிகளைத் துவக்கி வைத்தனர். புதுவையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி மரம் நடும் பணிகளைத் துவக்கி வைத்தார்.

ISHA 3 scaled

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், தமிழ்நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. வனவளம் போன்றவை வளர்ந்தால் மழைப் பொழிவு அதிகமாகி விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கும், இதற்கேற்ப, முதலமைச்சர் கனிமவளக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த, இயற்கை வளங்களைப் பேணி காக்க அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் காடுகளின் பரப்பை 33 சதவீதமாக உயர்த்த உறுதியேற்று இருக்கிறார். சாயப்பட்டறை கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கவும், காற்று மாசுபடுவதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகளில் பசுமைப் பூங்காக்கள் அமைக்கவும், சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கவும், கூவம் நதியை மீட்டெடுக்கவும் முதல்வர் சிறப்பான திட்டங்களைத் தீட்டி, தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டு வருகிறார் எனக் கூறினார்.

ISHA 2 scaled

விழாவில் ஷோபா சந்திரசேகர் பேசுகையில், ‘மண்ணு மாதிரி இருக்கியே’, ‘மரமண்டையா இருக்கியே’ என்று மனிதர்களைத் திட்டுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்ணையும் மரத்தையும் போல நாம் பிறருக்குப் பயனுள்ளதாக வாழ்ந்தாலே போதுமானது.

மரங்கள் என்பவை ‘வானத்தை நோக்கிப் பூமி எழுதிய கவிதைகள்’ என்று கவிஞர் கலீல் ஜிப்ரான் எழுதியுள்ளார். உண்மைதான், இங்கு இருக்கின்ற மரங்களை எல்லாம் பாருங்கள். அவை வானத்தை நோக்கி உயர்ந்து எழுதிய கவிதை போல இருக்கின்றன. அந்த அற்புதமான கவிதையை அழிக்கவோ அல்லது சாய்க்கவோ நமக்கு எந்த உரிமையும் கிடையாது எனக் கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் இதன் துவக்க விழாக்கள் நடைபெற்றன. இதில் 1,00,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு, மொத்தம் 317 ஏக்கர் பரப்பளவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டன.