கோவை சித்தாபுதூர் பகுதி அருகே பிரபல தனியார் மருத்துவமனை, தனியார் மகளிர் கல்லூரி, பள்ளி, வங்கிகள், குழந்தைகள் மருத்துவமனை, தனியார் இணையத்தளம் – தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த பகுதியில் சமீபத்தில் 4 புதிய போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டது. சில மாதங்களாகவே இப்பகுதியின் 2 இடங்களில் உள்ள சிக்னலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் 2 இடங்களில் சிக்னல் விளக்குகள் எரியாமல் போவது, இல்லையென்றால் மொத்தமாகவே சிக்னல் எரியாமல் போவது என பல நிகழ்வுகள் வாகன ஓட்டிகளை குழப்பி உள்ளன.

இந்த நிலையில், இன்று இதே இடத்தில் உள்ள ஒரு சிக்னலில் சில நேரம் பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று விளக்குகளும் எரிந்தன. இதனால் சிக்னலின் முன்பு வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள் சில நிமிடங்கள் குழப்பத்திலேயே நின்று கொண்டிருந்தனர். போக்குவரத்து பெண் காவல் அதிகாரி ஒருவர் அங்கு போக்குவரத்தை சீர் செய்து நிலையை சரியாக்கினார்.
இந்த குறிப்பிட்ட போக்குவரத்து சிக்னல் பல நேரங்களில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.

