கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் நகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களாக மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்ட போதிலும், மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் இன்று விடியற்காலையில் உக்கடம், டவுன்ஹால், கரும்புக்கடை, கோட்டைமேடு, ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், காந்திபுரம், ரத்தினபுரி, சிவானந்தா காலனி, ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

தொடர்ந்து நிலவி வந்த வெப்பம் காரணமாக அவதியடைந்திருந்த பொதுமக்கள், இந்த மழையால் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையால் சாலைகளிலும் சுற்றுப்புற சூழலிலும் இதமான நிலை உருவாகியுள்ளதுடன், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.