கோவை மாவட்டத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு சேர்த்து மேலும் 4 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய ஜனாதிபதி நியமித்தார். இதை இன்று அதிகாரபூர்வமாக மத்திய சட்டத்துறை அறிவித்தது.
வி.மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரை போலவே பலரும் வி.மோகனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
யார் இந்த வி.மோகனா?
வெங்கிட சுப்பிரமணி மோகனா 1983-1988 வரை கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் பயின்றார். அப்போதே படிப்பை கடந்து பேச்சு போட்டியில் இவருக்கு ஆர்வம் அதிகம்.
இறுதி ஆண்டில் கோவையில் வழக்கறிஞர் பஞ்சாபிகேசனிடம் பணிபுரிய ஆரம்பித்தார். இதை தொடர்ந்து, 1992ல் டெல்லி சென்ற அவர், அங்கேயே பணிபுரிய ஆரம்பித்தார். அப்போது அவர் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா-விடம் இணைந்து பணிபுரிந்தார்.
1996ல் உச்ச நீதிமன்றத்தின் ஏ.ஓ.ஆர். எனும் தகுதி தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
மூத்த வழக்கறிகஞர்களான கப்பில் சிபல், பா.சிதம்பரம், அருண் ஜெய்ட்லி ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பல்வேறு முக்கிய வழக்குகளில் இவர் வாதாடியுள்ளார்.
2015ல் உச்ச நீதிமன்றமே இவரை மூத்த வழக்கறிஞராக அங்கீகரித்தது. இந்த நிலையில் மே 27, 2026 அன்று தலைமை நீதிபதியை தலைவராக கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம் இவரை நீதிபதியாக உயர்த்த தனது பரிந்துரையை செய்தது.
இந்நிலையில் இப்போது இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதனால் இது சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது?
உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் வரவேண்டும் என்றால் அவரை அதற்கு பரிசீலனை செய்வதற்கு முன்னதாகவே அவர் இந்திய உயர் நீதிமன்றங்களில் ஏதாவது ஒன்றில் நீதிபதியாக பணி செய்து இருப்பது மிக மிக அவசியம். அப்படி இருக்கும் நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வான 5 பேரில், மோகனா அவர்கள் மட்டுமே நீதிபதியாக இல்லாமல் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் ஆனவர்.
வழக்கறிஞர் மோகனா இந்திய உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியாக பொறுப்புக்கு வரும் இரண்டாவது பெண். இவருக்கு முன்பு இந்து மல்ஹோத்ரா தான் இதுபோன்று நேரடியாக நியமிக்கப்பட்டவர்.
உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் பெருமளவு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதாக வரலாறு இல்லை. இதற்கு முன் வெறும் 11 பெண்கள் மட்டுமே – பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், ருமா பால், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா தேசாய், பானுமதி, இந்து மல்ஹோத்ர, இந்திரா பேனர்ஜீ, ஹிமா கோலி, பேலா திரிவேதி மற்றும் பி.வி. நகரத்னா உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பு வகித்துள்ளனர்.
இந்த நிலையில் மோகனா போன்ற தகுதி பெற்ற ஒருவர் இந்த மிகப்பெரும் இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது வழக்கறிஞராக பணிபுரியும் பல பெண்களை ஊக்கப்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

