மேற்காசியாவில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக விமான எரிபொருள் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளதால், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

இதனுடன், பல்வேறு வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் வழக்கத்தை விட நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவும் கூடுதல் எரிபொருள் செலவுக்கு வழிவகுத்துள்ளது.

பொதுவாக ஒரு விமான நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு செலவில் 30 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே எரிபொருள் செலவாக இருக்கும் நிலையில், தற்போது அது 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையை முன்னிட்டு, ஜூலை மாதம் வரை சர்வதேச விமான சேவைகளின் எண்ணிக்கையை ஏர் இந்தியா குறைத்துள்ளது. மேலும், 6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவைகளையும் குறைக்கும் நடவடிக்கையில் ஏர் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதன்படி, சில உள்நாட்டு வழித்தடங்களில் விமானப் பயணங்களின் எண்ணிக்கை 22 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சர்வதேச சேவைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாக, அதே காலகட்டத்தில் சில உள்நாட்டு வழித்தடங்களிலும் விமான சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்படுகின்றன. அதிகரித்த எரிபொருள் விலையின் தாக்கமே இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணமாகும் என தெரிவித்துள்ளது.