சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ ஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவு பிறப்பித்தார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் உடந்தையாக இருந்த பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்குமார் (30) ஆகிய இருவரைச் சூலூர் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இதில் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற முக்கியக் குற்றவாளி கார்த்திக், மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றொரு குற்றவாளி மோகன்குமார் நீதிமன்றக் காவலில் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓராண்டு சிறையில் அடைக்கும் வகையில் குண்டர் சட்டம் பாய்ச்ச காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி, இவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப் பிரத்யேகப் பரிந்துரைக் கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினார்.
இதனை பரிசீலித்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

