கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி சில நாட்கள் ஆன நிலையில் வெயில் வாட்டி வந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இன்று துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர் மடை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நான்கு மணி அளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

