சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட சொந்த செலவிற்கு தொடமாட்டேன் என கிணத்துக்கடவு தவெக எம்.எல்.ஏ விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட கோவை கிணத்துகடவு தொகுதியில் முதல்முறையாக தேர்தல் களத்தில் குதித்த தவெக வேட்பாளர் விக்னேஷ் அபார வெற்றி பெற்று, அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தார்.

இந்நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த அவருக்கு தவெக கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

சட்டமன்ற அலுவலக வளாகத்திலே பொதுமக்களிடம் பேசிய அவர், தற்போது குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக, குடிநீர் வடிகால் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளேன் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக எனது தொகுதியை  மாற்றுவேன். சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட சொந்த செலவிற்கு தொடமாட்டேன்.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் தனி சிறப்புகள் இருப்பதை போன்று கிணத்துகடவு தொகுதியையும் அனைத்து வசதிகள் கொண்ட தொகுதியாக மாற்றுவேன்.

மது மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டை எமது தொகுதியில் முழுமையாக ஒழிப்பதே இலட்சியம்.  கிணத்துகடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரங்களை கடந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால் பொதுமக்களை திரட்டி காவல்நிலையத்தை முற்றுகை இடுவேன். நீண்ட காலமாக இருக்கும் வெள்ளலூர் குப்பை கிடங்கு தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.