தங்கம் வாங்குவதை 1 வருடம் தவிர்க்கவேண்டும் என பிரதமர் மோடி கூறிய நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 % த்தில் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான்- அமெரிக்கா போர் சூழல் காரணத்தால் எரிபொருள் பெறுவதில் உலக அளவில் சவால்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணியை அத்தியாவசிய தேவைகளுக்கு பாதுகாப்பாக வைக்க இதுபோன்ற ஒரு அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார். இதற்கு வரவேற்பளித்துள்ள தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனம், சில கோரிக்கைகளையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த சம்மேளனத்தின் தலைவர் சபரிநாதன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அந்நிய செலாவணியைப் பாதுகாக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுதலுக்கு உரியது எனவும் இந்த இக்கட்டான நேரத்தில் இந்த சம்மேளனம், இந்திய அரசுக்கு ஆதரவாக உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
அரசுக்கு உதவும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 30,000 நகை வியாபாரிகள் தங்க நாணயங்களை விற்பதை நிறுத்த உள்ளனர், மேலும் தங்க சேமிப்பு சம்பந்தமான எந்தத் திட்டங்களையும் அவர்கள் ஊக்கப்படுத்த மாட்டார்கள், அதை தவிர்ப்பார்கள் எனவும் கூறியிருக்குறார்.
அதேநேரம், தங்கம் நகை வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், தங்கத்தை உலோக வடிவில் வாங்கி சேமிக்கும் கோல்டு இ.டி.எஃப், டிஜிட்டல் கோல்டு ஆகியவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தங்கம் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் புல்லியன் டீலர்கள், பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு மட்டுமே தங்கத்தை விற்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
