ஒரு நல்ல தலைமை எப்படி இருக்கவேண்டும் என்றால் நிறைய கருத்துக்களை சொல்லலாம். ஆனால் எப்படி இருக்கக்கூடாது என்றால் அதற்கு எளிதில் கிடைக்கும் சமகால உதாரணம் – டொனால்டு டிரம்ப் .
ஜனவரி 2025ல் அமெரிக்க ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தை துவங்கினார். ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் நலனை காக்க அமெரிக்க சந்தைக்குள் வரும் இறக்குமதி பொருட்கள் மேல் வரிகளை உயர்த்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். இதனால் இந்தியா, சீனா மட்டுமல்லாது வளர்ந்த நாடுகளும், வளரும் நிலையில் உள்ள நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.
ஜனவரி 2026ல் வெனிசுவேலா மேல் திடீரென தாக்குதல் நடத்தினார். அந்நாட்டிலிருந்து போதை பொருட்களும், புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைவது போன்ற செயல்கள் நடப்பதை தடுக்க தான் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் சொன்னாலும், உலக அளவில் இந்த செயலை சீனா, பிரேசில், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அமெரிக்க நிறுவனமான செவ்ரான்-னை (Chevron) தினமும் வெனிசுவேலா நாட்டில் இருந்து தினமும் 2,50,000 பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி வருகிறார் டிரம்ப். ஆம் உலக அளவில் மிக அதிக கச்சா எண்ணெய் கொண்ட நாடு மத்திய கிழக்கு பகுதிகளில் இல்லை, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா., வில் தான் உள்ளது. அரசியல் திறனாய்வாளர்கள் பலரும் இந்த எண்ணெய்யை குறிவைத்து தான் டிரம்ப் இப்படி நடந்து கொண்டார் என கூறுகின்றனர்.
பிப்ரவரி 2026ல் இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலை துவங்கினர். இப்போது தற்காலிக அமைதி நிலவினாலும் அது தவறும் பட்சத்தில் மீண்டும் தாக்குதலை நடத்த உறுதியாக உள்ளார். இவரின் இந்த போக்கால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. 79 வயதான டிரம்ப் உலகின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு செய்யும் செயல் நமது கோயம்புத்தூரின் ஒரு கடைக்கோடி பகுதியில் உள்ள சாமானியன் வீட்டில் எரியும் அடுப்பில் கைவைக்கிறது.
ஈரான் உடன் போரை முடித்துக்கொள்ள தீர்க்கமான முடிவை அவர் எடுப்பதாக தெரியவில்லை. இவரின் செயலுக்கு உலகம் தான் தொடர்ந்து விலையை கொடுத்து வருகிறது.
ஆனால் இவர் செய்துவரும் செயல் அமெரிக்காவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு இவர் விதித்த வரி உயர்வு காரணமாக அமெரிக்காவுடன் வணிக ரீதியில் நட்பாக இருந்த கனடா பல மாற்றங்களை செய்ய துவங்கியுள்ளது.
முன்பு சீன எலெட்ரிக் கார்களுக்கு 100% வரி விதித்து வந்த கனடா இப்போது அதை 6.1% ஆக மாற்றியுள்ளது. அதேபோல அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதை 2025 முதல் 20% குறைத்து வருகிறது. இதனால் என்ன தாக்கம் இருக்கும் என நீங்கள் நினைத்தால் – அமெரிக்காவுக்கு இதனால் $ 4 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போல பிற நாடுகள் தங்கள் வர்த்தக அணுகுமுறையை மாற்றியமைத்து வருகின்றனர்.
இந்தியாவோ பல நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை செய்து, அதன் ஏற்றுமதி பொருட்களுக்கான சந்தைகளை விரிவு படுத்தி வருகிறது.
ஈரான் மேல் புரிந்தப் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. உணவு பொருட்களின் விலையும் பல காரணங்களால் அங்கு உயர்ந்து வருகிறது. நிலைமை இப்படி இருந்தும் கூட இவர் திருந்துவதாக தெரியவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்னும் நாம் டிரம்ப் உடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் மல்லுக்கட்ட வேண்டும். ஜனவரி 2029ல் தான் இவரின் பதவி காலம் நிறைவடைகிறது.
இருந்தாலும் இந்த துன்பத்திலும் இன்பம் என்னவென்றால் அமெரிக்க சட்டப்படி ஒருவர் 2 முறையே அமெரிக்க ஜனாதிபதியாக தொடரமுடியும். இது டிரம்பிற்கு 2வது வாய்ப்பு . இதன் பின்னர் இவரால் உலகம் பெரும் சிராமத்திற்குள்ளாகாது.
