கோவையில் அமையும் மருத்துவ உபகரணங்கள் பரிசோதனை ஆய்வகம் தொடர்பான டெண்டர் பணிகளை சுகாதாரத்துறை நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை அடுத்து இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என்று முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

2018 இல் அமலுக்கு வந்த இந்தியாவின் மருத்துவ உபகரண விதிகளின்படி, மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் இறக்குமதி செய்யும் விற்பனை செய்யும் நபர்கள் அதற்கான உரிய அனுமதியை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆய்வகங்களில் பெறுவது கட்டாயமாகும்.

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்யும் ஆய்வகங்கள் உள்ளது. ஆனால் மருத்துவ உபகரணங்களை ஆய்வு செய்ய பிரத்தியேகமான ஆய்வகம் தமிழகத்தில் கிடையாது.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை இது ஒரு தொழில் மையமாக இருக்கிறது மேலும் இங்கு மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களும் அதிகம். எனவே இங்கு மருத்துவ உபகரணங்களின் தரத்தை பரிசோதனை செய்யும் தமிழகத்தின் முதல் நவீன ஆய்வகம் ஒன்றை மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து உருவாக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

கோவை மாநகரின் அவிநாசி சாலையில் ஹோப்ஸ் பகுதி அடுத்துள்ள கோவை மருத்துவ கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் நிலத்தில் இந்த ஆய்வகம் அமைகிறது. ரூ.29.67 கோடி மதிப்பில் அமையும் இந்த ஆய்வகம், ரூ.8 கோடிக்கு கட்டப்படும், மீதமுள்ள தொகைகள் கட்டமைப்பிற்கும் அதிநவீன உபகரணங்களை வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும். ஆய்வகம் 20,000 சதுர அடியில் கட்டி எழுப்பப்படும்.

டெண்டர் பணிகள் நிறைவேறியுள்ளதை அடுத்து, வரும் ஒரு மாத காலத்தில் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என்று தகவல் வெளிவந்திருக்கிறது.