கோவை சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், முருகன் மில்ஸ்/கங்கா மருத்துவமனை முதல் எருக்கம்பெனி வரை 1.2 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டும் பணியானது, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
மாநில நெடுஞ்சாலை துறையின் என்.ஹெச். பிரிவு சார்பில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 2026ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேம்பால பணிகள் தொடக்கத்தில் மிக மெதுவாக நடந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பின்னர் பணி விரைவுபடுத்தப்பட்டது.
தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை முன்பு இறங்கு தளம் அமைக்கும் பணி நிறைவடைந்து தார் சாலை போடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இறங்கு தளம் அமைக்கப்படுகிறது.
மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்துதல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட சில பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளது. மீதமுள்ள பணிகள் அனைத்தும் 2 மாதத்துக்குள் முடியும். எனவே, நிர்ணயிக்கப்பட்டபடி ஆகஸ்ட் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட வாய்ப்புள்ளது.

