கோவை நெகமம் அருகே நேற்று ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில் கணவன், மனைவி, மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் உறவினர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திங்கள் (11.5.26) மதியம் பொள்ளாச்சி-பல்லடம் பிரதான சாலையில் காரில் பயணித்துக்கொண்டு இருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (37), அவரின் மனைவி மேனகா (வயது-35) மற்றும் இவர்களின் மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஜித் (12) மற்றும் உறவினர் சினேகா (23), கோவை நெகமம் அருகே, பயணிக்கையில் பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்த லாரியில் மோதி படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தனபால், மேனகா, கனிஷ்கா மற்றும் கனிஷ்கா உயிரிழந்தனர். சிறுவன் சுர்ஜித் படுகாயமடைந்து முதலுதவி அளிக்கப்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், சுர்ஜித்துக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுர்ஜித்துக்கு ரூ. 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.