கோவை மாநகரின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை பக்திப் பரவசத்துடன் விமரிசையாக நடைபெற்றது.

காலை 9.30 மணியளவில் கோவிலிலிருந்து புறப்பட்ட தேரில், அலங்கரிக்கப்பட்ட நிலையில் சங்கமேஸ்வரர் எழுந்தருளினார். அவருக்கு முன்பாக 63 நாயன்மார்களின் சிலைகள், செங்கோல் உள்ளிட்டவை திருவீதியுலாவாக எடுத்துச் செல்லப்பட்டன. ‘சிவ சிவ’ என முழங்கிய பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேவாரப் பாடல்கள் ஓதுவார்களால் இசைக்கப்பட்டதுடன், கயிலாய வாத்தியங்களின் முழக்கமும் ஆன்மீகச் சூழலை அதிகரித்தது. தேரோட்டம் கோட்டைமேடு வீதி, உக்கடம் என்.எச். சாலை மற்றும் பெரிய கடைவீதிகள் வழியாக வலம் வந்து, காலை 11.30 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் துணை ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவினரும் முன்கூட்டியே முழுமையான சோதனைகள் மேற்கொண்டனர்.