பாதுகாப்பு கருதி வாக்கு எண்ணும் மையப் பகுதியில் மே 4ம் தேதி வரை, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் பொதுமக்கள் வாக்கு அளிக்க 3,540 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மொத்தம் 3,540 வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குகள் பதிவானது. எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இதை ஒட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ரெட் ஜோன் (சிகப்பு) பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது; அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இரவு, பகலாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கல்லூரியை சுற்றி உள்ள சாய்பாபா காலனி, இடையர் பாளையம், வெங்கடாபுரம், கோவில்மேடு, வேலாண்டிபாளையம், பூசாரி பாளையம், சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், பி.என் புதூர், ஆர்.எஸ் புரம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் வரும் 4ம் தேதி இரவு வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அறிவிப்பை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.