தமிழகம் முழுவதும் கோடை வெயில் சதமடித்து வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் உயர்ந்துள்ளதால், அதில் இருந்து தப்பிக்கவும், விடுமுறையை கழிக்கவும் மக்கள் அருவிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாடிவயல் சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்ததைக் காண முடிந்தது.​ கோவை குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில், கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

அருவியில் விழும் தண்ணீரில் மக்கள் குளித்து மகிழ்கின்றனர். ​சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், வனத்துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அருவிக்குச் செல்லும் வழியில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனைகள் நடத்தப்படுகிறது.

மேலும், அருவிப் பகுதியில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் தவிர்க்கவும் வனப்பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோடை விடுமுறை இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என்பதால், வரும் நாட்களில் கோவை குற்றாலத்தில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.