மலைகளின் ராணியான நீலகிரி மாவட்டத்திற்கு குடும்பத்துடன், நண்பர்களுடன் ட்ரிப் செல்வது என்பது பலருக்கும் தனி உற்சாகம். கோடை விடுமுறையும் தொடங்கி விட்டதால், குளிர்ந்த காற்று, பசுமையான தேயிலைத் தோட்டங்கள் என இயற்கை அழகை ரசித்துக்கொண்டே காரிலோ, பைக்கிலோ பயணிப்பது ஒருவித மன அமைதியுடன், அலாதியான மகிழ்ச்சியையும் தரும். அதேசமயம் மலைப்பாதைகளில் வாகனங்களை ஓட்டுவது அத்தனை சுலபமான காரியமும் இல்லை.

குறிப்பாக, ஊட்டியில் இருந்து மசினகுடிக்குச் செல்லும் கல்லட்டி மலைப்பாதை மிகவும் சவாலான ரூட். இந்த மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த செங்குத்தான வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதை வாகன ஓட்டிகளுக்கு சவாலானது.

சில வருடங்களுக்கு முன்பு வரை ஊட்டியிலிருந்து கல்லட்டி-மசினகுடி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் முதல் உள்ளூர் வாகனங்கள் வரை பயணிக்கலாம். சமவெளிப் பகுதிகளில் வண்டி ஓட்டிய வெளியூர் டிரைவர்களுக்கு, இந்த பாதையின்  செங்குத்து வளைவுகளை எப்படிக் கையாள்வது எனத் தெரிவதில்லை.

கியர்களை சரியாகப் பயன்படுத்தாமல், பிரேக்கை மட்டும் நம்பி வண்டியை இறக்குவதால், கட்டுப்பாட்டை இழந்து பல கோர விபத்துகள் இங்கே நடந்துள்ளன. விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால், மலைப்பாதைகளின் நெளிவு சுளிவுகளை நன்கு அறிந்த உள்ளூர் டிரைவர்களுக்கு மட்டுமே இந்த சாலையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்கள் நுழைய முடியாதபடி, தீவிரமான செக்போஸ்ட் சோதனைகள் நடக்கும். இந்த நடவடிக்கைக்கு பின்னர், மசினகுடி செல்லும் இந்த பாதையில் நடக்கும் விபத்துகள் பெருமளவு குறைந்தன.

இந்நிலையில் மீண்டும் விபத்துகளைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா வாகனங்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே உதகையில் இருந்து கல்லட்டி மலைப்பாதையில் செல்லலாம். கல்லட்டி மலைப் பாதை வழியாக மசினகுடி செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர்வாசிகள் உாிய நுழைவு சீட்டு பெற்று பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.