வெப்ப அலை பாதிப்புக்கு சிகிச்சை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டுகள் அமைக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடும் வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில், 10 படுக்கைகளுடன் கூடிய ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. காலை 7 மணி முதலே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்குகிறது. ஒரு சில மாவடங்களில் வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை காரணமாக பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு, வெப்பக்காய்ச்சல் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. கோவையில் நேற்றைய (ஏப்ரல் 27) நிலவரப்படி, அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், திடீரென உடல் வெப்பநிலை அதிகரித்தல், தலைவலி, வாந்தி, அதீக தாகம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் காய்ச்சல், தலைவலிக்காக அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில், 10 படுக்கைகளுடன் கூடிய ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.