அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாஜக-வின் பிரதிநிதியாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

இன்று அவர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், தான் கடந்து வந்த அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த காணொளி காட்சியில் கூறியிருந்ததாவது :-

இளம் வயதில் சட்டக் கல்லூரியில் பயிலும் போது, எனக்கு அரசியல் தூண்டுதலும் அரசியல் ஆர்வமும் இருந்தது.

அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியாவை திறம்பட வழிநடத்துவதை பார்த்து 1996 – 97 ஆண்டு காலத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் என்று சொல்லக்கூடிய மாணவர் இயக்கத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அரசியல் பயணம் துவங்கியது.

அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-ல் இணைந்து பணிசெய்தேன், பாஜக எஸ்.சி., எஸ்.டி, பிரிவு மாநில தலைவராக இரண்டு முறை பணியாற்றினேன்.  2014 இல் தேசிய செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் வேறு மாநிலங்களுக்கு சென்று அங்கு பணிபுரிவதற்கான நல்ல அனுபவம் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையில் உறுப்பினராக மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் 2017ல் தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் தேசம் முழுவதும் சென்று பணிபுரிவதற்கான நல்ல அனுபவம் கிடைத்தது.

2020 இல் தமிழக பாஜகவின் மாநில தலைவராக பணி செய்யவும், அதே நேரத்தில் தகவல் ஒளிபரப்பு துறையினுடைய இணை அமைச்சர் ஆகவும் மீன்வளம் & கால்நடை பராமரிப்பு என இரண்டு பிரிவுகள் பாரத பிரதமர் மோடி எனக்கு வாய்ப்பை கொடுத்து, மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பை வழங்கினார் என அவர் பகிர்ந்துகொண்டார்.