கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் குப்பைகாண இரட்டை வரி முறையை ரத்து செய்வேன் என அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் உறுதியளித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேடு அடுத்த ஜீவி ரெசிடென்சி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் தங்களுக்கான பிரச்சனைகளை யார் தீர்த்து தருகிறார்களோ அவர்களுக்கே தேர்தலில் வாக்குப்பதிவு என தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள குப்பைகளை அகற்ற வசூலிக்கப்படும். இரட்டை கட்டண முறையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசிப்போருக்கான பொது பயன்பாட்டு மின்சார கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு ஏற்றார் போன்று குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பொது பயன்பாட்டில் உள்ள இடங்களை மாநகராட்சி பராமரிப்பு செய்ய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்தும் குப்பைகளை தினசரி அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அடிப்படை பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ள அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமுக்கு ஆதரவு அளிப்பதென சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
