என்னைப் போன்ற சாதாரண பெண்கள் பல்வேறு தடைகளை கடந்து அரசியலில் தடம் பதிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முக்கிய பங்காற்றும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன் கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கோவை தெற்கு தொகுதியில் மேற்கொண்ட நலத்திட்ட பணிகள் பணிகள் குறித்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
சிவிக் பாலிசி ஃபோரம் எனும் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

இதில் வானதி சீனிவாசனின் ‘மக்கள் சேவை மையம்’ தன்னார்வ அமைப்பு சார்பில் அமல்படுத்தப்பட்ட அமுதம், இதம், சுயம், மோடியின் மகள் மற்றும் வாட்டர் ஏடிஎம் ஆகிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்து சிவிக் பாலிசி ஃபோரம் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டது.
இந்நிகழ்வில் பேசிய அண்ணாமலை, மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வானதி சீனிவாசன் மீண்டும் தேர்தல் பரப்பரையை துவங்கி உள்ளார். தன்னார்வ பணிகளாக அவர் அமல்படுத்திய திட்டங்களினால் கோவை தெற்கு தொகுதி மக்கள் பலர் பயனடைந்துள்ளனர். குறிப்பாக அமுதம் எனும் குழந்தைகளுக்கான பால் வழங்கும் திட்டத்தின் மூலம் 2500க்கும் மேற்பட்ட குழந்தைகள், சுயம் திட்டத்தின் கீழ் 1500க்கும் மேற்பட்ட பெண்கள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். வாட்டர் ஏடிஎம் திட்டத்தின் கீழ் 16,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
இந்த பணிகளால் பயன்பெற்றவர்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்த அறிக்கையோடு அவர் இப்போது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக களத்தில் உள்ளார். இதுவே ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினருக்கு முன்னுதாரணம் என பாராட்டினார்.
தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் அனைவரும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என முடிவு செய்து விட்டனர்.
மேலும், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தேர்தல் பயம் காரணமாக அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்து வருகிறார். சூப்பர் சிஎம் ஆக அவர் செயல்பட்டு வருகிறார். அரசு அதிகாரிகள் அவரோடு சென்று பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
கரூரை போல கோவையில் அமைக்கப்பட்டுள்ள பட்டிகளை அதிகாரிகள் அடைத்து வருவதாகவும், மணச்சநல்லூரில் டோக்கன் விநியோகம் காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும், மக்கள் டோக்கன் விநியோகம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. தென் மாநிலங்களில் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 33 சதவீத மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றார்.
வானதி சீனிவாசன் பேசுகையில்: காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் சிறிய இடைவெளி ஏற்பட்டது. ஆனால், பாஜக தலைவர்கள், தேசிய தலைமை, கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் உற்சாகமாக தனக்காக பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
2022ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் மேற்கொண்டு வரும் தன்னார்வ பணிகளுக்கு மக்கள் மத்தியில் சிறந்த ஆதரவு கிடைத்துள்ளது. இவை அனைத்தும் கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற பின்பும் தொடரும்.
பரிசுப் பொருட்கள் விநியோகம், கரூரில் இருந்து கிரிமினல் அமைச்சரை வர வைத்திருப்பது ஆகியவை திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல, நாங்கள் மக்கள் சக்தியை நம்பி உள்ளோம். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் மேற்கொண்டு வரும் தன்னார்வப் பணிகளின் மூலம் அனைத்து மதத்தினரும் பயன்பெற்றுள்ளனர். அமுதம் திட்டத்தின் கீழ் 35 சதவீதத்தினர் மற்றும் சுயம் திட்டத்தின் கீழ் 15 சதவீதம் என பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர். எந்த பாகுபாடும் இன்றி பாஜக அனைவருக்காகவும் செயல்படும் கட்சி என குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வரலாற்று சிறப்புமிக்க வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றம் திறந்தபோது முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தன்னை போன்ற சாதாரண பெண்கள் பல்வேறு தடைகளை கடந்து அரசியலில் தடம் பதிக்க முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்டார்.
