கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தா, அந்நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருச்சியில் சிந்துஜா எனும் பெண் ஒருவர் திமுக வழங்கும் பரிசு கூப்பன் தனக்கு வழங்கப்படவில்லை என விவாதம் செய்த போது அவரை திமுகவினர் அவமானப்படுத்தியதாலும், தாக்கினதாலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகளில் பார்க்கமுடிவதாக கூறினார்.
இந்த சம்பவத்தில் ஒரு பக்கம் திமுக, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மக்களுக்கு வாக்குக்கு பணம் தருகிறது, மற்றொரு பக்கம் ஒரு பெண்ணை அவமானப்படுத்தியிருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்து இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஏன் தனது குரலை எழுப்ப கூடாது? கருப்புக்கொடி எந்தக்கூடாது என கேள்வி எழுப்பினார்.
இம்மாநிலத்தில் திமுக ஆட்சியின் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. 2 வயது பெண் குழந்தையையோ, 80 வயது மூதாட்டியோ, அவர்களுக்கு தற்போதைய திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக அவர் விமர்சித்தார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னெடுத்துள்ளதை பற்றி விமர்சனம் செய்த அவர், தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், அதனால் அதிக அளவிலான பெண்கள் நமது சட்டமன்றங்களிலும், இந்திய பாராளுமன்றத்தில் பங்கேற்று இந்நாட்டில் முடிவு எடுக்கும் முக்கிய பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்க முடியும் என கூறினார்.
ஆனால், பழமைவாத பார்வையுடன், பெண்கள் இந்நாட்டில் முன்னேறவேண்டாம் என எண்ணுவோரே இதை எதிர்க்கின்றனர் என கூறிய அவர், திமுகவின் உதயசூரியன் அஸ்தமனம் ஆகி வருகிறது என கூறினார்.

