மத்திய அரசை எதிரியாக சித்தரித்து அரசியல் செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ஸ்டாலின், தொகுதி மறுவரையறைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு ஆபத்து, தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆபத்து என பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருப்பதால், மக்களவை தொகுதிகளை மாற்றியமைக்கும் மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட கடமையையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்கி வருகிறார். தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் பேசும் பேச்சுகள் அவர் பெரும் பதற்றத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அது தோல்வி பயத்தால் வந்த பதற்றம் என்பதை அனைவரும் அறிவர்.

மாறும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மிகமிக அவசியமானது. பல மாநிலங்களில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வந்து விட்ட பிறகு அதை வரையறை செய்வது தானே முறை? இதைத்தான் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய நமது அரசியலமைப்பும் சொல்கிறது.

1950ல் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 36 கோடி. அப்போது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 489. 1960ல் மக்கள்தொகை 44 கோடியை தாண்டியபோது மக்களவை இடங்கள் 520 ஆனது. கடைசியாக 1970ல் மக்களவை இடங்கள் 543 ஆனது. இப்போதும் இதுதான் தொடர்கிறது. அப்போது நம் நாட்டின் மக்கள்தொகை சுமார் 55 கோடிதான்.

இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை சுமார் 145 கோடி. நமக்கு அடுத்த அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,878. தொகுதி மறுவரையறை எவ்வளவு அவசியம் என்பது இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பெண்களின், சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் விரும்புபவர்கள் நீண்ட நெடுங்கால கனவு. அதை நனவாக்கும் வகையில்தான், 2023ல் நமது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த முதல் கூட்டத் தொடரிலேயே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றியது.

இதை நடைமுறைப்படுத்தவும், நாட்டின் அனைத்து மக்களின் குரல்களையும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்யும் வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது. ஆனால், வழக்கம்போல இதையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன.

நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரசும், திமுகவும் விரும்பவில்லை. வாரிசு அரசியலில் கூட ஆண்களைத்தான் அதிகார மேடையில் அமர்த்தும் அவர்கள் எப்படி பெண்கள் நிறைந்த அவையை விரும்புவார்கள்?

அதிலும் தேர்தல் நெருங்கி விட்டது என்பதால் ஸ்டாலினின் எதிர்ப்பில் அவரது அதிகார கோரப் பசி தெரிகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் பல மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான், எந்த மாநிலங்களின் பிரதிநித்துவமும் குறையாத வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதி அளித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு இப்போதுள்ள பிரதநித்துவம் குறையாத அளவுக்கு தொகுதி மறுவரையறை என்பது இருக்கும். ஆனால், மத்திய அரசை எதிரியாக சித்தரித்து அரசியல் செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ஸ்டாலின் இதைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு ஆபத்து, தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆபத்து என பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 12 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்தவர். அனைத்து மாநிலங்களையும் சமமாக நினைப்பவர். மாநிலங்கள் வளர்ந்தால் தான் இந்தியா வளரும் என்பது உணர்ந்து அதற்கேற்ப செயலாற்றி வருபவர்.

இதுவெல்லாம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனாலும், தொகுதி மறுவரையறையை பயன்படுத்தி மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடலாமா என பார்க்கிறார். திரு. ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் நினைப்பது எதுவும் நடக்கப் போவது இல்லை. தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில்தான் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.