தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள், பெண்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் திமுக, அதிமுக, தவெகவு பெண்களுக்கான வாக்குறுதிகளை அளித்துள்ளது. இலவசங்கள் இல்லை எனக் கூறும் நாதக, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

18 வயது முதல் 29 வயது வரையுள்ள இளம் மற்றும் பெண் வாக்காளர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில், வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்ற உள்ளனர். இந்த இரண்டு வர்க்கத்தின் வாக்குகளையும் குறிவைத்து தான் நான்கு முதல்வர் வேட்பாளர்களும் தங்களின் வியூகங்களை வகுத்தபடி உள்ளனர்.

ஷாக் தரும் இளம் வாக்குகள்

தேசத்தின் எதிர்காலமான இளைஞர்களை நோக்கி, அரசியல்வாதிகளின் கவனம் திரும்பியுள்ளது. தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலில் 18 வயதில் இருந்து 29 வயது நிரம்பியவர்கள், 1 கோடியே 7 லட்சம் பேர் உள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பாக 18 வயதில் இருந்து 19 வயது வரை 14 லட்சத்து 59 ஆயிரத்து 39 வாக்காளர்கள் உள்ளனர். 20 வயதில் இருந்து 21 வயது வரை 1 கோடியே 7 லட்சத்து 18 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களின் வாக்கு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

அதேநேரத்தில் 30 வயதில் இருந்து 39 வயது வரை மொத்தம் 1 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 58 லட்சத்து 60 ஆயிரத்து 998 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 57 லட்சத்து 49 ஆயிரத்து 740 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 2 கோடியே 37 லட்சத்து 90 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தான் இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

இந்த முறை தமிழ்நாட்டில் முதல்முறை ஓட்டு (18-19 வயது) போடும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சமாக உள்ளது. இதுவே 2024ம் ஆண்டு 10.92 லட்சமாக இருந்தது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை தமிழ்நாட்டில் தான் இளம் வாக்காளர்களின் ஒட்டு அதிகம் உள்ளது.

இளம் வாக்காளர்களின் ஒட்டு என்பது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது. அதேபோல இந்த இளம் வயதினரிடையே கூடுதல் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட இளைஞர்களை குறி வைத்து தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இயக்கத் தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரதானமான நான்கு தலைவர்களும் இவற்றை முன்னிறுத்தியே இயங்கத் தொடங்கியுள்ளனர்.

இளம் வாக்குகள்தலைவர்கள் போடும் கணக்கு

சமகாலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் இளம் மற்றும் பெண் வாக்காளர்களை கூடுதலாக கவனிக்கின்றனர். கடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் 5000 முதல் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்பட்டது. அதேபோல 31 தொகுதிகளில் 1000 முதல் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்பட்டது. எனவே ஒவ்வொரு வாக்கும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே அரசியல் கட்சிகள் ஆட்சி பொறுப்பை பிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.

தவெக தலைவர் விஜய், பிரபலமான திரை நட்சத்திரம் என்பதால் இளைஞர்களின் வாக்கு அவர் பக்கம் அதிகம் செல்லுமோ என்ற ஒரு அச்சம் பிற கட்சியினர் மத்தியில் நிலவுகிறது. இதற்கு காரணம் அவரது கூட்டத்திற்கு இளம் பட்டாளங்கள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக பெண்களும் அதிகளவில் தென்படுகின்றனர். இவை ஆளும் கட்சி, ஆண்ட கட்சிக்கு எச்சரிக்கையை கொடுப்பதாக உள்ளது.

காய் நகர்த்தும் தலைவர்கள்

18 முதல் 39 வயது வரை உடைய இரண்டரை கோடி வாக்காளர்களை கவரும் வகையில் திமுக காய் நகர்த்தியுள்ளது. 1 கோடியே 37 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை பெறும் நிலையில், தேர்தல் வாக்குறுதியில் ரூ.2000 தரப்படும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்துள்ளளார்.

முக்கியமாக ரூ.8000 கூப்பன் தரப்படும் என்ற வாக்குறுதியை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். பெண்களின் வாக்குகளை கவரக்கூடிய வகையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி உள்ளது.

இளம் வாக்காளர்களை கவர வேண்டும் என்பற்காகவே அதிக அளவில் புதுமுகங்களும், படித்தவர்களும் திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 19 பெண் வேட்பாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். திமுகவைப் பொறுத்தவரை இந்த முறை இளைஞர் அணியையும் தீவிரமாக களத்தில் இறக்கியுள்ளனர்.

அதேபோல ரூ.2500 உரிமைத் தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து, பெண்களின் வாக்குகளை குறி வைத்துள்ளார். அதேபோல கல்வி சார்ந்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்களை வாக்குறுதியில் அறிவித்துள்ளார்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொறுத்தவரை இலவசங்களை அறிவிக்காமல், வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய வகையில் இலவச கல்வி கட்டமைப்பு, வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் தரப்படும் என தேவைகளை தீர்த்து கொள்ளும் வகையில் தன்னிறைவை நோக்கி பயணிக்கிறார். அதேபோல 234 தொகுதிகளில் சரிசமமாக பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

தவெக தலைவர் விஜயைப் பொறுத்தவரை 6 இலவச கேஸ் சிலிண்டர், ரூ.2500 உரிமைத்தொகை என குடும்பங்களை கவரும் வகையில் வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி வருவதோடு, தங்கள் ஆட்சியில் பாதுகாப்பு வழங்கப்படும் என கூறி வருகிறார்.

ஆட்சி யாருக்கு?

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் இந்த காலத்தில் அதிகம் உள்ளது என்றாலும், தெளிவாக புரிந்து ஒரு விஷயத்தை இளைஞர்கள் அணுகுகின்றனர். எனவே, இளம் மற்றும் பெண் வாக்காளர்கள் யாருக்கு அதிக அளவில் வாக்களிப்பார்களோ அவர்கள் தான் ஆட்சி பொறுப்புக்கு வரமுடியும். மே 4 வரை இதற்காக காத்திருப்போம்.