மத்திய தொழில்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நிகழ்வில் அவர் பேசுகையில், மத்திய அளவிலும் சரி, பல்வேறு மாநிலங்களை ஆளும்போதும் சரி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கள் என்றுமே வளர்ச்சியிலும் நலத்திட்டங்களிலும் ஏழை மக்களின் உயர்விலும் கவனம் செலுத்தும் அரசாங்கங்களாக அவை இருக்கின்றன. ஏழை மக்கள், இளைஞர்கள், பெண்கள், சமூகத்தில் நலிவுற்ற மக்கள் பல நலத்திட்டங்களை பெற வேண்டும். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்க வேண்டும் என்று எங்கள் அரசு செயல்படுகிறது என்று கூறினார்.

கோவை மக்களிடம் ஒரு வேண்டுகோள். ஏப்ரல் 23ஆம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள். இதை செய்வதனால் நல்ல அரசாங்கத்தை தமிழகத்தில் கொண்டு வர முடியும், தமிழகத்தை வளர்ந்த ஒரு மாநிலமாக எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் அமைக்க முடியும், என அவர் கூறினார்.

தமிழ்நாடு ஒரு அசாத்திய ஆற்றல் கொண்ட மாநிலம். இதை ஒரு வளர்ச்சி மிகுந்த மாநிலமாக உருவாக்கவேண்டும் என அதிமுக, பாஜக, பா.ம.க., அமமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணியும் ஒரு குடும்பமாக ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது, என கூறிய அவர்,

இன்று தமிழகத்தை, ஊழலுக்கு பெயர்போன ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது, என விமர்சனம் செய்தார்.

தமிழ்நாடு இன்று முன்னேறாமல் கீழே செல்ல அந்த ஒரு குடும்பமே காரணம் என கூறிய அவர், டாஸ்மாக் முதல் பணி மாற்றத்தில், பணி நியமனத்தில் என பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது என விளாசினார்.

கோவைக்கு வளர்ச்சியை திமுக வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், திமுக ஆட்சியில் கோவையின் சாலைகள் மோசமாக உள்ளது, குடிநீர் விநியோகம் பாதிப்புக்குள்ளாகிறது, இப்பகுதிக்கு மிக முக்கியமான கவுசிகா நதி கவனிக்கப்படாமல் உள்ளது. நீர் நிலைகள் சீரமைப்பு செய்யப்படும் என அரசு சொன்னது நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதையெல்லாம் கோவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக அரசு கோவைக்கு உதவ அனைத்து வகையிலும் தவறி விட்டது. கோவை மக்கள் மற்றும் இந்த மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும் என கூறினார்.

கடந்த முறை சட்டமன்ற தேர்தல் காலத்தின் போது திமுக தரப்பில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கப்பட்ட நிலையில், அதில் 70% கூட நிறைவேற்றாமல் உள்ளது என்று பியூஸ் கோயல் குற்றம் சாட்டினார்.

கேஸ் சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் டீசல் வரி குறைப்புக்கு நடவடிக்கை ஆகியவற்றை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. ஆனால் எங்கெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடக்கிறதோ அங்கெல்லாம் பெட்ரோல் டீசல் மேல் சுமத்தப்படும் வாட் வரி குறைக்கப்பட்டு இருக்கிறது என ஒப்பீடு செய்து பேசினார்.

கல்வி கடன் ரத்து செய்யப்படும், 3.5 லட்சம் காலி அரசு பணிகளை நிரப்பி, புது அரசு பணிகளை வழங்குவதாக கூறினார்கள், இதையெல்லாம் திமுக அரசு நிறைவேற்றியதா? என கேள்வி எழுப்பினார்.

கடும் கடன் சுமையில் தமிழ்நாடு சிக்கி உள்ளது என கூறிய அவர், தமிழ்நாடு இன்று பொருளாதார அளவில் வலுவில்லாத மாநிலங்களால் ஒன்றாக இருக்கிறது. நிதி நிர்வாகம் சரியில்லாததால் இப்படிப்பட்ட சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.12 லட்சம் கோடி முதலீடு இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது என்று திமுக அரசு சொன்னாலும் அது தாள் அளவில் மட்டுமே தான் இருக்கிறது . அதில் 9% சதவீதத்திற்கும் கீழ் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது எனக்கு விமர்சனம் செய்தார்.

வரி பகிர்வு,மானியங்கள் போன்றவை மூலம் மத்திய அரசாங்கத்திடமிருந்து பெரும் தொகைகளை பெற்றும் கூட நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் தமிழக மக்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதை பார்க்க முடிகிறது என்று கூறினார்.

மத்திய அரசாங்கம் வழங்கிய நிதி எங்கு சென்றது என்று தமிழக மக்களுக்கும் கோவை மக்களுக்கும் ஸ்டாலின் சொல்ல வேண்டும் என்று தான் வலியுறுத்துவதாக கூறிய அவர், ஏழை மக்கள் மத்திய அரசாங்கம் திட்டம் மூலம் பயன் பெறுவதன் மேல் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு அப்படி என்ன பிரச்சனை உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சியில், செந்தில் பாலாஜி போன்றவர்கள் மின்சாரத்துறை டாஸ்மாக் துறையில் செய்த சர்ச்சை மிகுந்த சம்பவங்களுக்கு பதில் சொல்லும் படி நடவடிக்கை எடுக்கும், ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் செயல்களுக்கு பொறுப்பேற்பது உறுதி செய்யப்படும், என்று கூறினார்.

கோவைக்கு பாரதிய ஜனதா கட்சி செய்தது என்ன? என திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி சமீப காலங்களில் பிரச்சாரத்தின் போது எழுப்பிய கேள்வியை இந்த சந்திப்பின்போது அமைச்சர் பியூஷ் கோயலிடம் முன்வைத்ததற்கு அவர், செந்தில் பாலாஜி கூறுவதை கோவை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தில் ஜெயலலிதா அவர்களின் காலத்திலும், அதேபோல கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி காலத்திலும் உட்கட்டமைப்புகள் மேல் பெரும் முதலீடுகளை மத்திய அரசு செய்துள்ளது என பியூஸ் கோயல் பதில் அளித்தார்.

தமிழகத்திற்கு கூடுதலாக ரயில்வே லைன்கள், வந்தே பாரத் ரயில்கள், சென்னை மெட்ரோ என பல திட்டங்கள் இவர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டது. 

அதுவே தமிழக உட்கட்டமைப்புகள் மீது அல்லது அடிப்படை வசதிகள் மீது ஆளும் திமுக அரசு கவனம் செலுத்தியது இல்லை என அவர் விமர்சித்தார்.