தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் இன்று, தனது இரண்டாம் நாள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தினார்.
சாய்பாபா காலனி, ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் வானதி சீனிவாசன் விறுவிறுப்பாக வாக்குச் சேகரித்தார்.
குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளான கண்ணபுரம், கண்ணபுரம் கிழக்கு மேல் வீதி, கண்ணபுரம் குடிசைப் பகுதி, ஜாகிர் உசேன் வீதி, பெரியார் நகர், அம்பேத்கர் வீதி, காமராஜர் வீதி, கருணாநிதி நகர், ராஜ் நகர், ராமசாமி வீதி, அன்னை சத்யா நகர், பழனிச்சாமி வீதி மற்றும் பெரிய கண்ணப்பன் வீதி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

ஒவ்வொரு வீதிக்கும் சென்ற போது, அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆர்த்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்களிடம் நேரில் சென்று, கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறிய அவர், கோவையின் வளர்ச்சிக்காகத் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

