“எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது கோவை போன்ற மாவட்டங்கள் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்து இருக்கிறார். எனவே மீண்டும் அவர் முதலமைச்சரானால் பழைய படி திட்டங்கள் கிடைக்கும் என்று மக்கள் தெளிவாகி விட்டார்கள். எனவே உறுதியாக கோவை, திருப்பூர் நீலகிரியில் உள்ள 21 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும், கோவை மாவட்டத்தில் முழுமையாகவும், அவிநாசி தொகுதியும் சேர்த்து 11 தொகுதிகளில் உறுதியாக வெற்றி அதிமுகவிற்கு தான்,” என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
கேரளா செல்லும் பிரதமர் மோடியை வழியனுப்ப வந்த அவர் அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் களம் உற்சாகமாக இருக்கிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிகரமாக 210 தொகுதிகளை வெல்லும், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆவது உறுதி எனக் கூறினார்.
இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் சட்ட ஒழுங்கு, சொத்துவரி, மின்கட்டண உயர்வு போன்ற பல விலை உயர்வுகள் மக்களை பாதிப்பதாக கூறிய அவர், மக்கள் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.
“புதியவர்களுக்கு வாக்களித்தால் திமுக வெற்றி பெறும்” என்பது போல இதற்கு முன்னர் எஸ்.பி. வேலுமணி கூறியிருந்த நிலையில் இன்று விஜயின் த.வெ.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர், அவர்கள் வேட்பாளர்களை கண்டுபிடிக்கவே மிகவும் சிரமப்பட்டு இருப்பார்கள் போல, அவர்கள் களத்திலேயே கிடையாது. விஜய் திடீரென்று திடீரென்று காணாமல் போகிறார். கடந்த 10 நாட்களாக அவரை காணவில்லை.
போட்டி திமுகவுக்கும் அதிமுகவிற்கும் தான். மக்கள் அதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆகவே கண்டிப்பாக மீண்டும் ஆட்சிக்கு திமுக வரமுடியாது, அதிமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறினார்.

